Kurdalam waterfalls Open:5 நாட்களுக்கு பிறகு குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் சீசன் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. முக்கிய அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு செல்லும் சாலையில் யாரும் நுழைய முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குளிக்க அனுமதி கிடைத்து 5 நாட்கள் ஆன நிலையில் நேற்று காலை ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி அருவிகளில் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.
அதன்படி இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் அருவிகளில் குளித்தனர். வெள்ளம் வடியாததால் முக்கிய அருவியில் மட்டும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.